ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

திருப்பாவை (02) வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு !

வாழப் பிறந்துவிட்ட வனிதையரே ! கேளுங்கள் !

 --------------------------------------------------------------------------------------

திருமால், கண்ணனாக பிறந்திருக்கும்  ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்தப் பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி நோன்பிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள் என்கிறார் ஆண்டாள் !

 

---------------------------------------------------------------------------------------

பாடல்.(02)

---------------------------------------------------------------------------------------

 

வையத்து  வாழ்வீர்காள்  நாமும்  நம்பாவைக்குச்

.........செய்யும்  கிரிசைகள்  கேளீரோ  பாற்கடலுள்

பையத்  துயின்ற  பரமன்  அடிபாடி

........நெய்யுண்ணோம்  பாலுண்ணோம்  நாட்காலே  நீராடி

மையிட்டு  எழுதோம்  மலரிட்டு  நாம்முடியோம்

........செய்யாதன  செய்யோம்  தீக்குறளைச்  சென்றோதோம்

ஐயமும்  பிச்சையும்  ஆந்தனையும்  கைகாட்டி

.........உய்யுமாறு எண்ணி  உகந்தேலோ  ரெம்பாவாய் !

 

---------------------------------------------------------------------------------------

பொருள்:-

----------------

வாழப் பிறந்துவிட்ட வனிதையரே ! கேளுங்கள் ! நாமும் நம் பாவை நோன்புக் காலத்தில் செய்யக் கூடிய செயல்களைக் கேளுங்கள் ! திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனின் திருவடிகளைப் பாடுவோம் ! இந்த மார்கழித் திங்களில் நெய் உண்ணலாகாது; பால் உண்ணலாகாது; வைகறை கலையும் முன் நீராடுவோம்; கண்களுக்கு மை இடலாகாது; கூந்தலில் மலர் சூடலாகாது; செய்யக் கூடாத செயல்களைச் செய்யலாகாது; பொய்யுரை புகலல் ஆகாது; காக்கைக்கும், நாய்க்கும் உணவிடுவோம்; இல்லை என்று இரப்பவர்க்குப் பசி தீர்ப்போம்; கண்ணனையே எண்ணிக் காலம் கழிப்போம். அதில்தான் நம் வாழ்க்கையின் நோக்கம்  நிறைவேறும் !

---------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

நம் பாவைக்கு = பாவை நோன்புக் காலத்தில்; செய்யும் கிரிசைகள் = செய்யத் தக்க செயல்கள்; பையத் துயின்ற = மெல்லத் துயில்கின்ற; பரமன் = பரந்தாமன் என்னும் கண்ணனை; உண்ணோம் = உண்ணலாகாது; நாட்காலே = வைகறைப் பொழுதில்; தீக்குறளை = பொய்யுரைகளை


ஐயம் = கேட்காமலேயே தருதல் (எளியோர்க்கும், விலங்குகள் பறவைகளுக்கும் பசி தீர உணவளித்தல்); பிச்சை = இரந்து கேட்போர்க்கு உணவளித்துப் பசி தீர்த்தல்; ஆந்தனையும் = இயன்றவரை; கைகாட்டி = தந்து; உய்யும் ஆறு = நற்கதி கிடைக்கும் வழி; எண்னி உகந்து = நினைத்து மகிழ்ச்சியுடன்; ஏலோர் = வணங்குவோம்  பாவாய் = பதுமை போன்ற பெண்களே !


---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

--------------------------------------------------------------------------------------


திருப்பாவை (03) ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி !

உலகத்தைதன் ஒரே காலடியால் அளந்தவன் !

 ----------------------------------------------------------------------------------

பச்சைமா மலை போல் மேனி ! பவளவாய் கமலச் செங்கண் ! அந்த மாலவனைப் பாடிப் பராவினால், மாதம் மும்மாரி பொழியும்; கோகுலம் குடங் குடமாய்ப் பால் கறக்கும் என்கிறார் ஆண்டாள் ! பாடலைப் பார்ப்போமா !

 

-----------------------------------------------------------------------------------

பாடல் (03)

------------------------------------------------------------------------------------

 

ஓங்கி  உலகளந்த உத்தமன் பேர்பாடி

........நாங்கள்நம்  பாவைக்குச் சாற்றிநீ  ராடினால்

தீங்கின்றி  நாடெல்லாம்  திங்கள்மும் மாரிபெய்து

.........ஓங்குபெருஞ்  செந்நெல்  ஊடு கயலுகள

பூங்குவளைப்  போதில்  பொறிவண்டு  கண்படுப்பத்

.........தேங்காதே  புக்கிருந்து  சீர்த்த  முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்

.........நீங்காத செல்வம்  நிறைந்தேலோ ரெம்பாவாய் !

 

------------------------------------------------------------------------------------

பொருள்:-

---------------

 

உலகம் முழுவதையும் தன் ஒரே காலடியால் அளந்த உத்தமன் அவன் ! அவன் பெயரைப் பாடி நோன்பிருந்து நீராடினால் , நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்யும் ! செந்நெல் வயலில் மீன்கள் விளையாடும் !

 

குவளை மலரில் வண்டுகள் நிம்மதியாகத் தூங்கும் ! ஆவினங்கள் வள்ளல்கள் போல் குடம் குடமாய்ப் பால் கொடுக்கும் ! குறையாத செல்வம் குவிந்து கிடக்கும் ! வாருங்கள் ! கண்ணனைப் பாடுவோம் !

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள் :-

---------------------------

 

உலகளந்த உத்தமன் = கண்ணன்; பாவைக்குச் சாற்றி = பாவை நோன்பிருந்து கண்ணனைப் பாடி ; மும்மாரி = திங்கள் தோறும் மூன்று முறையாவது மழை பெய்யும் ; ஓங்கு பெருஞ் செந்நெல் = உயர்ந்து வளர்ந்து விளைந்திருக்கும் செந்நெல்; ஊடு = வயல்களின் ஊடே ; கயல் உகளும் = மீன்கள் துள்ளி விளையாடும்; குவளைப் போதில் = செங்கழுநீர் மலரில்;

 

கண் படுப்ப = கண்ணுறங்கும்; தேங்காதே =  நிறைவாகவே; புக்கிருந்து = புகுந்திருந்து (மடியில் புகுந்து நிறைந்து); சீர்த்த முலை பற்றி = மடியைப் பற்றிக் கறக்கும் போது; வாங்கம் = கடல் (போல) ; குடம் நிறைக்கும் = குடங் குடமாய்ப் பால் பொழிந்து நிறைக்கின்ற; செல்வம் நிறைந்து = செல்வம் பெருகிட ; ஏலோர் = ஏத்திப் பாடி வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற பெண்களே !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

-----------------------------------------------------------------------------------


திங்கள், 30 மே, 2022

திருப்பாவை (04) ஆழி மழைக் கண்ணா !

என் கண்ணா ! கடலும் நீயே ! மழையும் நீயே !

 ----------------------------------------------------------------------------------


ஆழி  மழைக்கண்ணா  ஒன்றுநீ  கைகரவேல்

.........ஆழி  யுட்புக்கு  முகந்துகொ  டார்த்தேறி

ஊழி  முதல்வன்   உருவம்போல்  மெய்கறுத்து

.........பாழியந்  தோளுடைப்  பத்மநா  பன்கையில்

ஆழிபோல்  மின்னி  வலம்புரிபோல்  நின்றதிர்ந்து

.........தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ  உலகினில்  பெய்திடாய்  நங்களும்

.........மார்கழி  நீராட  மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய் !

 

------------------------------------------------------------------------------------

பொருள்:-

--------------

 

என் கண்ணா ! கடலும் நீயே ! மழையும் நீயே !  ஒன்று சொல்கிறேன்; கடலிலே புகுந்து நீ தண்ணீரை எடுக்கிறாய்; மள மளவென வானத்தில் ஏறுகிறாய்; ஊழிக் காலத்தின் முதல்வனகிய திருமாலைப் போல் கார் கறுத்து மேகமாகி  விடுகிறாய்;

 

அந்த திருமாலாகிய பதமநாபன் கையிலுள்ள சக்கராயுதம் போல் மின்னி, சங்கு போல் ஒலி எழுப்பி, எப்போதுமே தாழ்ந்து பழக்கமில்லாத அவனது சாரங்க வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் பூமியில் மழையாகப் பொழிகிறாய் ! இப்போதும் பொழிய வாராய், நாங்களும் மார்கழி நீராட வேண்டுமல்லவா !

 

------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

------------------------

 

ஆழி = கடல் (கடலும் நீயே); மழை = மழையும் நீயே ; கண்ணா = கண்ணனே!; ஒன்று = ஒன்று சொல்கிறேன்; கைகரவேல் = நீ ஒளிக்காதே ! ; ஆழியுட் புக்கு = கடலில் புகுந்து; முகந்து கொடு = நீரினை முகந்து கொண்டு ; ஆர்த்து ஏறி = ஒலி எழுப்பி மேலே செல்கிறாய்; ஊழிமுதல்வன் = திருமால்;

 

உருவம் போல் = மேனியைப் போல; மெய் கறுத்து = கரிய நிறம் அடைந்து;  பாழி = கடல் போன்ற மேகமாகி விடுகிறாய். அம் = அழகிய ; தோளுடைய = தோள்களையுடைய; பத்மநாபன் = தாமரைப்பூவைத் தன் உந்தியிலே கொண்டுள்ள திருமால்; கையில் ஆழி போல் = கையில் விளங்குகின்ற சுதர்சனம் என்னும் சக்கரப் படையைப் போல; மின்னி = ஒளி வீசி; வலம்புரி போல் = வலம்புரிச் சங்கு போல;

 

நின்றதிர்ந்து = ஒலி எழுப்பி; தாழாதே = எப்போதும் தாழ்ந்து பழக்கமில்லாத; சார்ங்கம் = திருமால் கையில் உள்ள சாரங்கம் என்னும் வில்; உதைத்த சர மழை போல் = விடுபட்ட அம்புகள் போல ; வாழ உலகினில் பெய்திடாய் = இந்த உலகம் வாழ்ந்திடப் பூமியில் மழையாகப் பொழிகிறாய், இப்போதும் பொழிய வாராய் ; மகிழ்ந்து ஏல் ஓர் = மகிழ்ந்து கண்ணனைப் போற்றி வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற பெண்களே.

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

------------------------------------------------------------------------------------


ஞாயிறு, 29 மே, 2022

திருப்பாவை (05) மாயனை மன்னு வடமதுரை மைந்தனை !

மாயவனை, வடமதுரையின் இளங்குமரனை !

 ----------------------------------------------------------------------------------------

மாயனை  மன்னு  வடமதுரை  மைந்தனைத்

.........தூய  பெருநீர்  யமுனைத் துறைவனை,

ஆயர்  குலத்தினில்  தோன்றும்  அணிவிளக்கை,

.........தாயைக் குடல்விளக்கம் செய்ததா  மோதரனைத்

தூயோமாய்  வந்துநாம்  தூமலர்த்தூ  வித்தொழுது,

.........வாயினாற்  பாடி மனத்தினாற் சிந்திக்கப்

போய  பிழையும் புகுதருவான் நின்றனவும்

.........தீயினில்  தூசாகும்  செப்பேலோர் எம்பாவாய் !

 

-----------------------------------------------------------------------------------------

பொருள்:-

--------------

அந்த மாயவனை, வடமதுரையின் இளங்குமரனை, வெள்ளம் பெருக்கெடுக்கும் யமுனைக்குத் தலைவனை, யாதவர் குலத் திருவிளக்கை, தாயின் வயிற்றில் பால் வார்த்த தாமோதரனை, தூயவர்களாக வந்து, நாம் மலர் தூவித் தொழுது, வாயாரப் பாடுவோம்; மனதாரச் சிந்திப்போம்; அவன் நமது கடந்த காலத் தவறுகளை மன்னிப்பான். எதிர்காலத்தில் நமது அறியாமையையும் மன்னிப்பான். நமது தவறுகள்  எல்லாம் தீயினில் விழுந்த தூசு போலாகும் !

----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

------------------------

மாயனை = மாயங்கள் புரியும் கண்ணனை; மன்னு = நிலைத்த புகழ் பெற்ற; வடமதுரை மைந்தனை = வடமதுரை என்னும் வடநாட்டு நகரத்துப் புதல்வனை; யமுனைத் துறைவனை = யமுனை ஆற்றின் தலைவனை; ஆயர் குலம் = இடையர் குலம்; அணி விளக்கு = திருவிளக்குப் போன்றவன்; தாயைக் குடல் விளக்கம் செய்த =  பிள்ளை இல்லாத யசோதைக்கு வளர்ப்புப் பிள்ளையாக வந்து சேர்ந்து அவளுக்குப் பிள்ளை இல்லாக் குறையைத் தீர்த்த கண்ணனை;

 

தாமோதரன் = தாமம் (கயிறு) + உதரன் (வயிறு உடையவன்) = தாமோதரன். எங்கும் போய் விடாதவாறு வயிற்றில் கயிறு கட்டி உரலுடன் பிணைக்கப்படிருந்த குழந்தை கண்ணன் = தாமோதரன்; தூயோமாய் = தூய மனமும் மெய்யும் உடையவர்களாய்; தூ மலர்த் தூவித் தொழுது = மலர் தூவி வணங்கி; வாயினாற் பாடி = கண்ணனை வாயினால் பாடி; மனத்தினால் சிந்தித்து = கண்ணனையே மனதில் சிந்தித்து;

 

போய பிழையும் = இதுவரை செய்த பிழைகளும்; புகுதருவான் நின்றனவும் = எதிர்காலத்தில் நமது அறியாமையினால் செய்யக் கூடிய பிழைகளையும்; தீயினால் தூசாகும் = கண்ணன் மன்னித்து விடுவதால் அவை எல்லாம் தீயில் இட்ட தூசுகள் போல மறைந்து போகும்; செப்பு ஏல் ஓர் = எனவே கண்ணனை ஏத்திப் போற்றிப் பாடி வணங்குவோம். எம்பாவாய் = எமது குலப் பெண்களே !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 15]

{29-05-2022}

---------------------------------------------------------------------------------------


சனி, 28 மே, 2022

திருப்பாவை (06) புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் !

வெள்ளைச் சங்கு இன்னிசை ஒலி எழுப்புகிறது !

 --------------------------------------------------------------------------------------

புள்ளும்  சிலம்பினகாண்  புள்ளரையன்  கோயிலில்

.........வெள்ளை  விளிசங்கின்  பேரரவம் கேட்டிலையோ !

பிள்ளாய் எழுந்திராய் ! பேய்முலை நஞ்சுண்டு,

.........கள்ளச் சகடம் கலக்கழிய,  காலோச்சி,

வெள்ளத்து அரவில்  துயிலமர்ந்த வித்தினை,

.........உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்,

.........உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ  ரெம்பாவாய் !

 

----------------------------------------------------------------------------------------

பொருள்:-

---------------

இதோ, பறவைகள் பாடுகின்றன ! கருடன் என்னும் பறவைக்கு அரசன் அல்லவா, நம் கண்ணன் ! அவன் கோவிலில் உள்ள வெள்ளைச் சங்கு இன்னிசை ஒலி எழுப்புகிறது ! அது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா ?  ஏ ! பேதைப் பெண்ணே ! எழுந்திரு ! அரக்கர் குலக் கொடும் பெண்ணான பூதகியின் மார்பில் பாலுண்பது போலப் பாசாங்கு செய்து அவளது உயிரை உறிஞ்சிக் கொன்றவன் நம்  கண்ணன் !

 

 

கள்ளத் தனமாக சக்கர வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து எறிந்தவன் ! பாற்கடல் வெள்ளத்தில் பாம்பணையில் பள்ளி கொண்டவன் அவன் ! அந்த மூல விதையை மனதில் வைத்து முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து அரி !  அரி ! என்று அழைக்கிறார்கள் அந்தப் பேரொலி கேட்டு உன் உள்ளம் குளிரவில்லையா ? அந்தக் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்கிடுவோம் வாரீர் !

 

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

 

புள்ளும் சிலம்பின = பறவைகள் எல்லாம் ஒலி எழுப்பிக்கொண்டு பறக்கின்றன; புள்ளரையன் கோயிலில் = பறவைகளின் அரசனாகிய கருடனை வாகனமாகக் கொண்ட கண்ணபிரான் கோயிலில்; வெள்ளை விளி சங்கின் = வெண்ணிறச் சங்குகளின்; பேரரவம் = முழக்க ஒலி; கேட்டிலையோ உனக்குக் கேட்கவில்லையா ? பிள்ளாய் = பெண்ணே ! பேய் முலை நஞ்சு உண்டு = பூதகி என்னும் அரக்கியின் மார்பில் நச்சுப் பால் உண்டு;

 

சகடம் = சக்கரம்; கலக்கழிய = அழிந்து போகுமாறு; கால் ஓச்சி = காலால் உதைத்து ; வெள்ளத்து = பாற்கடல் நீரில்; அரவில் = பாம்புப் படுக்கையில்; துயிலமர்ந்த = துயில் கொண்ட ; வித்தினை = மூல விதை போன்றவனை; உள்ளத்துக் கொண்டு = மனதில் எண்ணி; மெள்ள எழுந்து = எழுந்து நின்று ; அரி என்ற பேரரவம் =அரி, அரிஎன்று உச்சரிக்கின்ற பேரொலி; உள்ளம் புகுந்து = உன் உள்ளத்தில் புகுந்து; குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = மனதை நெகிழ வைக்க, கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவாயாக !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 14]

{28-05-2022}

----------------------------------------------------------------------------------------


வியாழன், 26 மே, 2022

திருப்பாவை (07) கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் !

கருங்குருவிகள் கீசு’ ‘கீசுஎன்று கூவுகின்றன !

 ----------------------------------------------------------------------------------------


கீசுகீசு  என்றுஎங்கும்  ஆனைச்சாத்தன்  கலந்து

.........பேசின பேச்சுஅரவம் கேட்டிலையோ, பேய்ப்பெண்ணே !

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

.........வாச  நறுங்குழல்  ஆய்ச்சியர்  மத்தினால்

ஓசைப் படுத்த  தயிர்அரவம் கேட்டிலையோ !

.........நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்  மூர்த்தி.

கேசவனைப் பாடவும்  நீகேட்டே  கிடத்தியோ,

.........தேசம்  உடையாய்  திறவேல்ஓர்  எம்பாவாய் !

 

-----------------------------------------------------------------------------------------

பொருள்:-

---------------

 

ஆனைச் சாத்தன் என்னும் கரிச்சான் குருவிகள் தங்கள் உறவையும் பிரிவையும் பற்றி கீசு கீசுஎன்று பேசிக் கொள்ளும் பேச்சை நீ கேட்கவில்லையா ? ஆயர்பாடிப்பெண்கள் காசுஎன்ற அச்சுத் தாலியும் பிறப்புஎன்ற ஆமைத்தாலியும் கல கல என்று ஒலிக்கும்படி தயிர் கடையும் ஓசை உனக்குக் கேட்கவில்லையா


எங்கள் தலைவியே ! அந்த நாராயணனை, மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடிக் கொண்டே இருக்கிறோம் ! நீ கேட்டுக் கொண்டே படுத்து இருக்கிறாயா ? ஓகோ ! அவனது அருள் ஒளி உனக்கு வாய்த்து விட்டதோ ! அப்படியானால் அந்த ஒளியோடு வந்து கதவைத் திற பார்க்கலாம் !

 

-----------------------------------------------------------------------------------------

 அருஞ்சொற் பொருள்:

--------------------------------------

 

கீசு கீசு = கரிக்குருவிகள் எழுப்பும் ஒலி; ஆனைச் சாத்தன் = கரிக்குருவி; அரவம் = ஒலி; பேய்ப்பெண்ணே = அறிவில்லாதவளே; காசு = ஒருவகைத் தாலி; பிறப்பு = இன்னொரு வகைத் தாலி; கலகலப்ப = கல கலவென்று ஒலிக்க; ஆய்ச்சியர் = ஆயர்குலப் பெண்கள்; மத்தினால் = தயிர் கடையும் மத்து கொண்டு; தயிர் அரவம் = பானைக்குள் தயிர்  சுழலும் ஒலி; நாயகப் பெண் = எங்கள் தலைவியே !


நார அயணன் (நீர் வழியே செல்பவன்) என்னும் நாராயணமூர்த்தி = பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள்; கேசவன் = மாலவன்; பாடவும் = நங்கள் போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம்; நீ கேட்டே = நீ கேட்டுக் கொண்டே; கிடத்தியோ = படுத்துக் கிடக்கிறாயா ? தேசம் = (தேஜஸ்) ஒளி; திறவு ஏல் ஓர் எம்பாவாய் = கதவைத் திறவாய் பதுமை போன்ற எம் பெண்ணே ! கண்ணனைப் போற்றிப் பாடுவோம், வாராய் !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு, 2053, விடை (வைகாசி) 12]

{26-05-2022}

-----------------------------------------------------------------------------------------