வாழப் பிறந்துவிட்ட வனிதையரே ! கேளுங்கள் !
திருமால், கண்ணனாக
பிறந்திருக்கும் ஆயர்பாடியில் வாழும்
சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்தப் பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி நோன்பிருக்கும்
வழிமுறைகளைக் கேளுங்கள் என்கிறார் ஆண்டாள் !
---------------------------------------------------------------------------------------
பாடல்.(02)
---------------------------------------------------------------------------------------
வையத்து
வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
.........செய்யும்
கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்
துயின்ற பரமன் அடிபாடி
........நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காலே நீராடி
மையிட்டு
எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
........செய்யாதன
செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும்
பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
.........உய்யுமாறு எண்ணி உகந்தேலோ
ரெம்பாவாய் !
---------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
வாழப் பிறந்துவிட்ட வனிதையரே ! கேளுங்கள் ! நாமும் நம் பாவை நோன்புக் காலத்தில் செய்யக் கூடிய செயல்களைக் கேளுங்கள் ! திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனின் திருவடிகளைப் பாடுவோம் ! இந்த மார்கழித் திங்களில் நெய் உண்ணலாகாது; பால் உண்ணலாகாது; வைகறை கலையும் முன் நீராடுவோம்; கண்களுக்கு மை இடலாகாது; கூந்தலில் மலர் சூடலாகாது; செய்யக் கூடாத செயல்களைச் செய்யலாகாது; பொய்யுரை புகலல் ஆகாது; காக்கைக்கும், நாய்க்கும் உணவிடுவோம்; இல்லை என்று இரப்பவர்க்குப் பசி தீர்ப்போம்; கண்ணனையே எண்ணிக் காலம் கழிப்போம். அதில்தான் நம் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறும் !
---------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
நம் பாவைக்கு = பாவை நோன்புக் காலத்தில்; செய்யும் கிரிசைகள் = செய்யத் தக்க செயல்கள்; பையத் துயின்ற = மெல்லத் துயில்கின்ற; பரமன் = பரந்தாமன் என்னும் கண்ணனை; உண்ணோம் = உண்ணலாகாது; நாட்காலே = வைகறைப் பொழுதில்; தீக்குறளை = பொய்யுரைகளை;
ஐயம் = கேட்காமலேயே தருதல் (எளியோர்க்கும், விலங்குகள் பறவைகளுக்கும் பசி தீர உணவளித்தல்); பிச்சை = இரந்து கேட்போர்க்கு உணவளித்துப் பசி தீர்த்தல்; ஆந்தனையும் = இயன்றவரை; கைகாட்டி = தந்து; உய்யும் ஆறு = நற்கதி கிடைக்கும் வழி; எண்னி உகந்து = நினைத்து மகிழ்ச்சியுடன்; ஏலோர் = வணங்குவோம் பாவாய் = பதுமை போன்ற பெண்களே !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 17]
{31-05-2022}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக