ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 ஜூன், 2022

திருப்பாவை (00) வெளியீட்டு முன்னுரை!


நண்பர்களே !

 

தமிழே இனிமையானது. தமிழ்க் கவிதைகளோ இன்னும் இனிமையானவை ! கவிதையைச் சுவைப்பது என்பது ஒரு கலை ! நெஞ்சு பொறுக்குதில்லையே ! இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் !என்பது போன்ற பாரதியாரின் பாடல்களில் எனக்கு ஒரு மயக்கமுண்டு !

 

தமிழுக்கும் அமுதென்று பேர் ! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !எனக் குழையும் பாரதிதாசன் பாடல்களிலும் எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு உண்டு !

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்என்பது போன்ற வடலூர் வள்ளலாரின் பாடல்களில் எனக்கு ஒரு தீராத வேட்கை உண்டு !

 

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்என்பது போன்ற  புறநானூற்றுப் பாடல்களின் சொல்லாடலில் எனக்குச் சிந்தை நிறைகின்ற பொந்திகை (மன நிறைவு) நிரம்பவுண்டு !

 

எல்லே இளங்கிளியே ! இன்னும் உறங்குதியோ?” என்பன போன்ற ஆண்டாள் நாச்சியாரின் தமிழ்க் கனிச் சுவையில் இணையற்ற ஈடுபாடும் உண்டு !

 

மார்கழித் திங்கள் பிறந்ததும் வைணவத் திருத் தலங்களில் திருப்பாவையின்  இன்னொலி இளங் காற்றில் மெல்ல மிதந்து வரும். அதன் இசையும் சொற்சுவையும் கேட்பாரைப் பிணிக்கும் தன்மையன !

 

நண்பர்களே !  ஆண்டாள் திருமொழியை அள்ளிப் பருகிட வாருங்கள் ! திருப்பாவையில் இடம் பெற்றுள்ள தேன் தமிழ்ச் சொற்களைச் சுவைத்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறேன் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 18]

{01-06-2022}

------------------------------------------------------------------------------------


திருப்பாவை (01) மார்கழித் திங்கள் மதி நிறைந்த !

மாதங்களில் இது மார்கழி !  ஒளி நிறைந்த நன்னாள் !

--------------------------------------------------------------------------------------

மார்கழி மாதம் ! வைகறை நேரம் ! உடலில் சில்லென்று மோதிச் செல்லும் இளங் காற்று ! வெண்பட்டு விரித்தது போன்று எங்கும் பனிப் போர்வை ! நீராடப் போகிறார்கள் இளம் பெண்கள் !  யாரிவர்கள் ?

 

---------------------------------------------------------------------------------------

 

மார்கழித்  திங்கள் மதிநிறைந்த  நன்னாளால்

.........நீராடப்  போதுவீர்  போதுமினோ  நேரிழையீர் !

சீர்மல்கும்  ஆய்ப்பாடிச்  செல்வச் சிறுமீர்காள் !

.........கூர்வேல்  கொடுந்தொழிலன்  நந்தகோ  பன்குமரன்,

ஏரார்ந்த கண்ணி  யசோதை  இளஞ்சிங்கம்,

.........கார்மேனிச்  செங்கண்  கதிர்மதியம்  போல்முகத்தான்,

நாரா  யணனே  நமக்கே  பறைதருவான்,

.........பாரோர்  புகழப்  படிந்தேலோர் எம்பாவாய் !

 

---------------------------------------------------------------------------------------

பொருள்:

---------------

 

மாதங்களில் இது மார்கழி ! வானிலும் மண்ணிலும் ஒளி நிறைந்த நன்னாள் ! மங்கையரே ! வாருங்கள் ! நீராடச் செல்வோம். சீர் நிறைந்த ஆயர்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமியரே ! கூரிய வேலும், கொடிய தொழிலும் கொண்ட நந்தகோபனுக்குக் குமாரனாக வந்தவன், அழகு வழியும் கருங்கண்ணாள் யசோதையின் இளஞ்சிங்கம், கறுத்த மேனியும், சிவந்த கண்ணும், கதிரவன் போல் முகமும் கொண்டவன் ! அவர் பெயர் நாராயணன் ! அவனே நமக்கு நோன்புப் பரிசு தருவான் ! உலகம் புகழ அவன் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம் ! வாருங்கள் !

 

---------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

 

மதி நிறைந்த நன்னாள் = எங்கும் ஒளி பெருகும் வைகறைப் பொழுது; போதுவீர் = வருவீர்; போதுமினோ = வாருங்கள்; கூர்வேல் கொடுந்தொழிலன் = கூர்வேல் கொண்டு போரிடும் ஆற்றல் பெற்றவன்; ஏரார்ந்த = அழகிய; கண்ணி = கண்களை உடைய; கதிர் மதியம் = கதிரவனின் கதிர்கள்; நாரம் = நீர் (கடல்), அயணன் = செல்பவன்; நாராயணன் = திருப்பாற்கடலில் அலைவழியே பயணிப்பவன்; பறை = அருள்; படிந்து = நீராடி; ஏலோர் = வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற சிறுமியரே.


---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 18]

{01-06-2022}

---------------------------------------------------------------------------------------