கருங்குருவிகள் ‘கீசு’ ‘கீசு’ என்று
கூவுகின்றன !
கீசுகீசு
என்றுஎங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
.........பேசின பேச்சுஅரவம் கேட்டிலையோ, பேய்ப்பெண்ணே !
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
.........வாச
நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ !
.........நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி.
கேசவனைப் பாடவும் நீகேட்டே
கிடத்தியோ,
.........தேசம்
உடையாய் திறவேல்ஓர் எம்பாவாய் !
-----------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------
ஆனைச் சாத்தன் என்னும் கரிச்சான் குருவிகள் தங்கள் உறவையும் பிரிவையும் பற்றி ”கீசு கீசு” என்று பேசிக் கொள்ளும் பேச்சை நீ கேட்கவில்லையா ? ஆயர்பாடிப்பெண்கள் “காசு” என்ற அச்சுத் தாலியும் “பிறப்பு” என்ற ‘ஆமைத்தாலி’யும் கல கல என்று ஒலிக்கும்படி தயிர் கடையும் ஓசை உனக்குக் கேட்கவில்லையா ?
எங்கள் தலைவியே ! அந்த நாராயணனை, மூர்த்தியை, கேசவனை
நாங்கள் பாடிக் கொண்டே இருக்கிறோம் ! நீ கேட்டுக் கொண்டே படுத்து இருக்கிறாயா ? ஓகோ ! அவனது அருள் ஒளி உனக்கு வாய்த்து
விட்டதோ ! அப்படியானால் அந்த ஒளியோடு வந்து கதவைத் திற பார்க்கலாம் !
-----------------------------------------------------------------------------------------
--------------------------------------
கீசு கீசு = கரிக்குருவிகள் எழுப்பும் ஒலி; ஆனைச் சாத்தன் = கரிக்குருவி; அரவம் = ஒலி; பேய்ப்பெண்ணே = அறிவில்லாதவளே; காசு = ஒருவகைத் தாலி; பிறப்பு = இன்னொரு வகைத் தாலி; கலகலப்ப = கல கலவென்று ஒலிக்க; ஆய்ச்சியர் = ஆயர்குலப் பெண்கள்; மத்தினால் = தயிர் கடையும் மத்து கொண்டு; தயிர் அரவம் = பானைக்குள் தயிர் சுழலும் ஒலி; நாயகப் பெண் = எங்கள் தலைவியே !;
நார அயணன் (நீர் வழியே செல்பவன்) என்னும்
நாராயணமூர்த்தி = பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள்; கேசவன் =
மாலவன்; பாடவும் = நங்கள் போற்றிப் பாடிக்
கொண்டிருக்கிறோம்; நீ கேட்டே = நீ கேட்டுக் கொண்டே; கிடத்தியோ = படுத்துக் கிடக்கிறாயா ? தேசம் = (தேஜஸ்) ஒளி; திறவு ஏல் ஓர் எம்பாவாய் = கதவைத் திறவாய்
பதுமை போன்ற எம் பெண்ணே ! கண்ணனைப் போற்றிப் பாடுவோம், வாராய் !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு,
2053, விடை (வைகாசி) 12]
{26-05-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக