ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஏப்ரல், 2022

திருப்பாவை (19) குத்து விளக்கெரிய கோட்டுக்கால் !

 கொத்துமலர் சூடிய குழலாள் நப்பின்னை !

 -------------------------------------------------------------------------------------

குத்து  விளக்கெரியக்  கோட்டுக்கால் கட்டிலின்மேல்

.........மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,

கொத்தலர்  பூங்குழல் நப்பின்னை  கொங்கைமேல்,

.........வைத்துக் கிடந்த மலர்மார்பா !  வாய்திறவாய் !

மைத்தடங்  கண்ணினாய் !  நீயுன்  மணாளனை,

.........எத்தனை போதும்   துயிலெழ  ஒட்டாய்காண் !

எத்தனை ஏலும்  பிரிவாற்ற  கில்லாயால்

.........தத்துவம் அன்று தகவேலோர் ரெம்பாவாய் !

 

-------------------------------------------------------------------------------------

 பொருள்:-

---------------

 

குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தினால் ஆன கால்களை உடைய கட்டிலில், மெத்தென்றிருக்கும் பஞ்சு மெத்தையில், கொத்துமலர் சூடிய குழலாள் நப்பின்னை படுத்திருக்கிறாள். அவளது மார்பின் மேல் தலை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா ! கண்ணா ! கொஞ்சம் வாய் திறந்து நப்பின்னையிடம் சொல்லையா !

 

மைவிழி மாதே ! நப்பின்னை ! நீ என்ன ஒரு பொழுதும் உன் மணவாளனை எழுந்திருக்கவே விட மாட்டாயா ? கட்டிப் பிடித்தே படுத்திருப்பாயா ? ஓகோ ! ஒரு கணம் கூட உன்னால் பிரிவைச் சந்திக்க முடியாதோ ! நல்லது ! இது வெறும் தத்துவமல்ல ! உனக்கு நியாயம் தான் ! எங்களையும் கொஞ்சம் கவனித்து அவனை எழுப்பி விடம்மா !

 

--------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:-

--------------------------

கோட்டுக் கால் = யானைத் தந்தத்தினால் ஆன கால்களை உடைய கட்டில்; பஞ்ச சயனத்தில் = பஞ்சு மெத்தையில் ; கொத்து அலர் = கொத்துக் கொத்தான மலர்;   பூங்குழல் = பூப்போன்ற மென்மையான தலை முடி; நப்பின்னை = கண்ணனின் மனைவியாகிய நப்பின்னை; கொங்கை மேல் = மார்பின் மேல்; வைத்துக் கிடந்த = தலை வைத்துப் படுத்திருக்கும்; மலர் மார்பா = மலர் மாலை அணிந்த மார்புடைய கண்ணா !; வாய் திறவாய் = வாய் திறந்து பேசு ஐயா!

 

மைத் தடங் கண்ணினாய் = மைவிழி மாதே !; எத்தனை போதும் = ஒரு பொழுதும்; துயில் எழ ஒட்டாய் காண்= எழுந்திருக்க விட மாட்டாயா ?; எத்தனை ஏலும் = சிறிது நேரம் கூட பிரிவு ஆற்றகில்லாய் = பிரிந்து இருக்க மாட்டாயா ; தத்துவமன்று = கணவனும் மனைவியும் துயில்வதில் கூட பிரியக் கூடாது என்பது வெறும் தத்துவம்அல்ல ; தகவு ; அதுதான் கற்பு என்னும் நல்லொழுக்கமும் கூட;  ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனை போற்றிப் பாடுவோம் , வாருங்கள் பாவையரே !

 

-------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ’

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 14]

{14-04-2022}

----------------------------------------------------------------------------------



 

திங்கள், 25 ஏப்ரல், 2022

திருப்பாவை (20) முப்பத்து மூவர் அமரர்க்கு !

தேவர்களுக்குத்  துன்பம் நேர்கையில்  !

 

முப்பத்து  மூவர்  அமரர்க்கு  முன்சென்று

.........கப்பம்   தவிர்க்கும்   கலியே  துயிலெழாய் !

செப்பம்   உடையாய் ! திறல்உடையாய்!  செற்றார்க்கு

.........வெப்பம்  கொடுக்கும்  விமலா ! துயிலெழாய் !

செப்பன்ன மென்முலை,  செவ்வாய்,  சிறுமருங்குல்,

.........நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

.........இப்போதே எம்மைநீ  ராட்டுஏல்ஓர் எம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

அடடா ! முப்பத்து மூன்று கோடித்  தேவர்களுக்கும் துன்பம் வரும் போது, தானே தளபதியாக நின்று, அவர்களது மயக்கத்தையும் கலக்கத்தையும் நீக்கும் கருணைக் கடலே ! கொஞ்சம் துயில் எழுந்து வா ! நாங்கள் உன் பிரிவால் வாடுகிறோம் ! அழகு மிகுந்தவனே ! ஆற்றல் மிகுந்தவனே ! காப்பதே கடமையாகக் கொண்டவனே ! பக்தருக்குப் பகைவர் வந்தால் அவர்களைச் சுட்டெரிப்பாய் ! அதிலே நீ வெப்பமாகத் தென்படுவாய் !

 

நிமலா ! கொஞ்சம் துயிலெழுந்து வா ! செப்பு முலையும் சிற்றிடையும் திருவாயும் கொண்ட நப்பின்னாய், நீயும் துயில் எழுந்து வா ! எங்கள் நோன்பு நிறைவேறுவதற்காக ஆலவட்டமும் கண்ணாடியும் தருகிறோம், அவற்றைக்  கண்ணனிடம்   கொடுத்து  அவன்  அருள்  மழையில் எங்களை நீராடச் செய், நப்பின்னாய் !

 

--------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

 

கற்பம் = துன்பம்; கலி = கடல்; செப்பம் உடையாய் = பிறருக்கு உதவும் அருட்குணம் உடையவனே;  திறலுடையாய் = வலிமை நிறைந்தவனே ; செற்றார்க்கு = செற்றார்க்கு = பகைவர்க்கு; வெப்பம் கொடுக்கும் விமலா = சுட்டெரிக்கும் தீயாக மாறும் தூயவனே;  துயிலெழாய் = உறக்கம் நீங்கி எழுவாயாக ! செப்பு அன்ன = சிமிழ் போன்ற சிறு மருங்குல் = சிற்றிடை;

 

நப்பின்னை நங்காய் = கண்ணனின் வாழ்க்கைத் துணைவியான நப்பின்னையே ; திருவே = அழகுப்பதுமையே; துயிலெயாய் = நீயும் எழுந்திரு; உக்கம் = ஆலவட்டம் (அரசனுக்கு இருபுறமும் இரு பெண்கள் நின்று கொண்டு பெரிய தூரிகை போன்ற விசிறியால் மன்னனுக்கு விசுறுவார்களே அது தான் ஆலவட்டம்) தட்டொளி = முகம் பார்க்கும் கண்ணாடி.

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethiam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 12]

{25-04-2022|

----------------------------------------------------------------------------------



வெள்ளி, 22 ஏப்ரல், 2022

திருப்பாவை (21) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி !

மானிடனாகப் பிறந்திருக்கும் ஒளிச் சுடர் நீ !

 -------------------------------------------------------------------------------------

ஏற்ற  கலங்கள்  எதிர்பொங்கி  மீதளிப்ப,

.........மாற்றாதே  பால்சொரியும்  வள்ளல்  பெரும்பசுக்கள்,

ஆற்றப்  படைத்தான்  மகனே  அறிவுறாய் !

.........ஊற்றம்  உடையாய்  பெரியாய்  உலகினில்

தோற்றமாய்  நின்ற  சுடரே !  துயிலெழாய் !

.........மாற்றார்  உனக்கு வலிதொலைந்துன்  வாசற்கண்

ஆற்றாது  வந்து உன்  அடிபணியுமா  போலே

.........போற்றியாம் வந்தோம் ! புகழ்ந்துஏல் ஓர்  எம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

பாத்திரம் கொள்ளாத அளவுக்குப் பால் சொரியும் பசுக்களைப் படைத்தவன் நந்தகோபன் ! அவனுடைய மகன் அல்லவா நீ ! கேளாய் கண்ணா ! இவ்வளவு பெரும் செல்வத்தை உடையவன் நீ ! பெரியவன் நீ ! மறைந்து நின்று வரம் கொடுக்கும் கடவுள்கள் போல் அல்லாமல், உலகில் மானிடனாகவே பிறந்திருக்கும் ஒளிச் சுடர் நீ !

 

பகைவர்கள் எல்லாம் உன்னிடம் தோற்று, ஆற்றாமல் வந்து உன் அடி பணிவார்கள் ! அவர்கள் உன் வலிமையின் முன் தோற்றார்கள் ! நாங்கள் உன் கருணைக்குத் தோற்றோம் ! உன்னைப் போற்றிப் புகழவே அடிமை ஆனோம் ! கொஞ்சம் துயில் எழுந்து வாராய் கண்ணா !

 

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

 

ஏற்ற கலங்கள் = பால் கறக்க எடுத்து வந்த பாத்திரங்களில்;  எதிர் பொங்கி = பால் பொங்கி  ;  மீது அளிப்ப = நிரம்பி வழிந்திட; மாற்றாதே = மறுப்பு ஏதுமின்றி; வள்ளல் பெரும் பசுக்கள் = வள்ளல்போல நிரம்பவும் பால் தரும் பசுக்கள்; ஆற்றப் படைத்தாய் மகனே = ஏராளமாகக் கொண்ட நந்தகோபனுடைய மகனே ! கண்ணா ! அறிவுறாய் = கேளாய் ! ஊற்றம் = ஆற்றல்; பெரியாய் = பெரியவன் நீ; உலகில் தோற்றமாய் = இந்த நிலவுலகத்தில் மானிட உருவெடுத்து வந்துள்ள ஒளிச் சுடரே ! மாற்றார் = பகைவர்கள்;

 

வலி தொலைந்து = வலிமை இழந்து தோற்று; உன் வாசற்கண் ஆற்றாது வந்து = உய்யும் வழிதேடி வந்து உன் வாசலில் நின்று ; உன் அடி பணியுமாபோலே = உன் திருவடிகளைப் பணிந்து வணங்குவதைப் போல ; போற்றி யாம் வாந்தோம் = உன்னைப் போற்றிப் பாடி வணங்கிட நாங்கள் வந்துள்ளோம்; புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் புகழ்ந்து பாடுவோம் வாராய் பதுமை போன்ற பெண்ணே ! நப்பின்னாய் !

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 09]

{22-04-2022}

 ------------------------------------------------------------------------------



செவ்வாய், 19 ஏப்ரல், 2022

திருப்பாவை (22) அங்கண்மா ஞாலத்து !

உன் காலடியில் வந்து  கூடிக் கிடப்பார்கள் !

 ------------------------------------------------------------------------------------

அங்கண்மா ஞாலத்து  அரசர்  அபிமான

.........பங்கமாய்  வந்துநின்  பள்ளிக்கட்  டிற்கீழே,

சங்கமிருப்  பார்போல்  வந்து தலைப்பெய்தோம் !

.........கிண்கிணி  வாய்ச்செய்த  தாமரைப் பூப்போல,

செங்கண்  சிறுச்சிறிதே  எம்மேல்  விழியாவோ !

..........திங்களும்  ஆதித்  தனும்எழுந்  தாற்போல்

அங்கணிரண்  டும்கொண் டெங்கள்மேல்  நோக்குதியேல்,

.........எங்கள்மேற்  சாபம்  இழிந்தேலோ  ரெம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

பொருள்:-

----------------

 

மன்னாதி மன்னரெல்லாம் தங்கள் அரசபோகத்தைக் கைவிட்டு, கைகட்டி வாய் புதைத்து உன் காலடியில் வந்து  கூடிக் கிடப்பார்கள் !  அவர்களைப் போலவே நாங்களும், எல்லாவற்றையும் வெறுத்து விட்டு, நீயே கதி என்று நம்பி வந்து விட்டோம் ! உனது திருவிழிகள், காற் சதங்கை வாய் பிளந்தாற்போல்  பாதியாவது  திறந்து பாராதோ ! தாமரைப் பூப் போன்ற உன் சிவந்த விழிகள் மெல்லத் திறந்து எம்மைப் பாராவோ ?

 

திங்களும் கதிரவனும் ஒரே நேரத்தில் எழுந்து வந்ததைப் போல ஒளி வீசும், உன் இரண்டு கண்களும் எங்களைப் பார்த்தால், நாங்கள் செய்த பாவங்களும் தீவினைகளும்  பறந்தோடிப் போய்விடுமே ! கொஞ்சம் கண்களைத் திற கண்ணா !  ஏல் ஓர் எம்பாவாய் = வாருங்கள் பாவையரே ! நம் கண்ணனைப் பாடி வணங்குவோம் !

 

---------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

 

அங்கண் = அவ்விடத்தில்; மாஞாலத்து = இந்தப் பரந்த பூமியின் ; அரசர் = மன்னர்கள்; அபிமான பங்கமாய் = செருக்கை எல்லாம் விட்டொழித்து; வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே = வந்து நீ துயில் கொள்ளும் கட்டிலின் கீழே; சங்கம் = கூடி ; இருப்பார் போல் = இருப்பதைப் போல; வந்து = நாங்களும் இங்கு வந்து; தலைப் பெய்தோம்= கூடி இருக்கிறோம்; கிங்கிணி = கால்களில் கட்டும் சதங்கை; வாய்ச் செய்த = சதங்கையின் சிறிய வாய் போல, தாமரைப் பூப்போல = தாமரை மலர் போல; செங்கண் = உன சிவந்த விழி இரண்டும் ;

 

சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ = சிறிதாவது  திறந்து எம்மைப் பார்க்கலாகாதோ !;  திங்களும் ஆதித்தனும் = சந்திரனும் சூரியனும்; எழுந்தாற்போல் = ஒருசேர எழுந்து வந்தாற் போல; அங்கண் = உன் அழகிய கண்கள்; இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் = இரண்டையும் மெல்லத் திறந்து எங்களைப் பார்த்தாயானால்; எங்கள் மேற் சாபம் = நாங்கள் செய்த பாபங்களும் தீவினைகளும் ; இழிந்து = பறந்தோடிப் போய்விடுமே கண்ணா ! ஏல் ஓர் எம்பாவாய் = நம் கண்ணனை போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !


----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-04-2022}

---------------------------------------------------------------------------------



திங்கள், 11 ஏப்ரல், 2022

திருப்பாவை (23) மாரி மலை முழஞ்சில் மன்னி !

குகையிலே உறங்கிய சிங்கம்  விழித்து எழுந்தது !

 ------------------------------------------------------------------------------------

மாரி  மலைமுழஞ்சில்  மன்னிக்  கிடந்துறங்கும்

.........சீரிய  சிங்கம்  அறிவுற்றுத்   தீவிழித்து

வேரி  மயிர்பொங்க  எப்பாடும்  பேர்த்துதறி

.........மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா  போலேநீ  பூவைப்பூ  வண்ணாஉன்

.........கோவில்நன்  றிங்கனே  போந்தருளிக் கோப்புடைய

சீரிய  சிங்கா  சனத்திலிருந்து   யாம்வந்த

.........காரிய  மாராய்ந்து  அருளேலோர்   எம்பாவாய் !

 

-------------------------------------------------------------------------------------

பொருள்:-

---------------

 

அதோ எங்கள் கண்ணன் எழுந்து வந்துவிட்டான்.  மழைக் காலத்தில் குகையிலே உறங்கிய சிங்கம் கதுமென விழித்து எழுந்தது; அதன் பிடரி மயிரைச் சிலிர்த்தது; நிமிர்ந்து பார்த்தது; விண்ணைப் பார்த்து உரத்து முழங்கியது; புறப்பட்டது !

 

அதுபோல வந்துவிட்டாயே, பூவையர்க்கெல்லாம் பூப்போன்ற கண்ணா ! உன் கோயிலிலிருந்து மெதுவாக வந்து அரண்மனையில் உள்ள மாணிக்க அரியாசனத்தில் உட்கார் ! அதன் பிறகு நாங்கள் வந்திருப்பதன் காரணத்தைக் கேட்டு அருள் புரி ! கண்ணன் வரும்வரை அவனைப் போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள் பாவையரே !

 

--------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

 

மாரி = மழைக்காலத்தில்; மலை முழைஞ்சு = மலையில் உள்ள குகை;  மன்னி = (நிலையாக) நெடு நாள்களாக;  அறிவுற்று = விழித்தெழுந்து; தீ விழித்து = தீப்பொறி பறக்கும் கண்களால் பார்த்து; வேரி மயிர் பொங்க = மெல்லிய மணம் வீசும் பிடரி மயிரைச் சிலிர்த்து;  எப்பாடும் பேர்த்து உதறி = மறுபடியும் தலையை ஆட்டிப் பிடரியைக் குலுக்கி உதறி; மூரி நிமிர்ந்து = சோம்பல் தீரத் தலையைச் ஆட்டிச் சிலிர்த்து;

 

முழங்கி = உரத்து ஒலி எழுப்பி முழக்கமிட்டு (கர்ஜித்து), புறப்பட்டுப் போதருமாப் போல = புறப்பட்டு வருதல் போல்; பூவைப் பூவண்ணா = மகளிர் மனம் கவரும் காயா மலர் வண்ணனே; உன் கோயில் = உன் கோயிலிலிருந்து ; நன்று இங்ஙனே = நல்லபிள்ளையாக உன் அரண்மனைக்கு;  போந்தருளி = எழுந்தருள்வாய்;

 

கோப்பு உடைய = பன்மணிகள் கோத்து அழகாகத் திகழும்; சீரிய சிங்காசத்திலிருந்து = பெருமை மிகு அரியாசனத்தில் அமர்ந்து ; யாம் வந்த காரியம் ஆராய்ந்து = நாங்கள் வந்திருக்கும் நோக்கம் அறிந்து; அருள் = அருள் புரிவாயாக ! ஏல் ஓர் எம்பாவாய் = அதுவரைக் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவோம், வாருங்கள் பாவையரே !

 

-----------------------------------------------------------------------------------

 

முழைஞ்சு = மலைக் குகையை குறிக்கும் சொல். இந்த புதிய சொல்லை மனதில் இருத்துங்கள் நண்பர்களே ! முழங்கி = விண்ணைப் பார்த்து உரத்து ஒலி எழுப்பி (முழங்கி என்று பொருள்). சிறு வயதிலிருந்து நமக்கு சிங்கம் கர்ஜிக்கும்என்று தான் சொல்லித் தந்திருக்கின்றனர் ஆசிரியர்கள். இனிமேல் கர்ஜிக்கும்என்பதை விட்டு விட்டு முழங்கும்என்று சொல்லிப் பழகுவோம்.

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 28

{11-04-2022}

------------------------------------------------------------------------------------



சனி, 9 ஏப்ரல், 2022

திருப்பாவை (24) அன்றிவ்வுலகம் அளந்தாய் !

இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய் !

 ---------------------------------------------------------------------------

 

அன்றுஇவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !

...செங்குன்றத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி !

...கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி !

குன்று குடையாய் எடுத்தாய்  குணம்போற்றி !

...வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !

என்றென்றுன்  சேவகமே  ஏத்திப்  பறைகொள்வான்,

...இன்றுயாம்  வந்தோம்  இரங்கேலோர் எம்பாவாய் !

 

------------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

அன்று இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய்; இராமனாக இலங்கைக்குச் சென்று வென்றாய்;  சகடாசுரனை உதைத்தாய்; கன்றின் வடிவெடுத்து வந்தான் வத்சாசுரன்,; கன்றைத் தூக்கி வீசி அவனைக் கொன்றாய் ! கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்தாய் ! எதிரியை வெல்லுவது உன் கையில் உள்ள வேல் ! என்றும் உனக்குப் பணி செய்து  புகழ் பெறவே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கு இடம் கொடு ! எம்மை ஏற்றுக் கொள் !

 

-------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:-

--------------------------

 

இவ்வுலகம் அளந்தாய் = வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி மண் கேட்டு, இவ்வுலகத்தை ஒரு அடியாலும், மேலுலகை இன்னொரு அடியாலும் அளந்து, மூன்றாவது அடியை மாவலியின் தலை மீது வைத்து அழுத்தி அவனைக் கொன்றவனே ! அடி போற்றி = உன் காலடிகளை வணங்கிப் போற்றுகிறோம் ! .தென்னிலங்கை சென்றங்கு செற்றாய் = தெற்கே உள்ள இலங்கைக்குச் சென்று அங்கு இராவணனைப் போரில் வென்று அழித்தாய் !

 

திறல் போற்றி = உன் வெற்றியைப் போற்றி வணங்குகிறோம் ! பொன்றச் சகடம் உதைத்தாய் = சக்கர வடிவம் எடுத்து வந்த சகடாசுரனைக் காலால் உதைத்துக் கொன்றாய் ! புகழ் போற்றி =  உன் புகழைப் போற்றி வணங்குகிறோம் ! கன்று குணிலா வெறிந்தாய் = கன்றின் உருவத்தில் வந்த வத்சாசுரனைக் குறுந்தடியாக்கித் தூக்கி எறிந்து கொன்றவனே ! உன் கழல்களைப் போற்றி வணங்குகிறோம் !

 

மழை கொட்டோ கொட்டென்று கொட்டி ஊழிப் பெருவெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஆயர் குலத்தை வருத்தியபோது, கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்து அவர்களைக் காத்தவனே ! உன் அருட்குணத்தைப் போற்றி வணங்குகிறோம் !

 

பகைவர்களை எல்லாம் வென்றொழிக்கும் உன் கையிலுள்ள வேலினைப் போற்றி வணங்குகிறோம்! என்றென்றும் உன் தாளடியில் கிடந்து பணி செய்ய எங்களுக்கு வரமருள்வாய் ! இதற்காகவே இன்று இங்கு வந்துள்ளோம்! மனம் இரங்கிடுவாய்  மணிவண்ணா !

 

-------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு :2053, மீனம் (பங்குனி) 26]

{09-04-2022}

-------------------------------------------------------------------------------