தேவர்களுக்குத் துன்பம்
நேர்கையில் !
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
.........கப்பம் தவிர்க்கும் கலியே
துயிலெழாய் !
செப்பம் உடையாய் !
திறல்உடையாய்! செற்றார்க்கு
.........வெப்பம் கொடுக்கும் விமலா ! துயிலெழாய் !
செப்பன்ன மென்முலை, செவ்வாய், சிறுமருங்குல்,
.........நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் !
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
.........இப்போதே எம்மைநீ
ராட்டுஏல்ஓர் எம்பாவாய் !
--------------------------------------------------------------------------------------
----------------
அடடா ! முப்பத்து மூன்று கோடித்
தேவர்களுக்கும் துன்பம் வரும் போது, தானே தளபதியாக நின்று, அவர்களது
மயக்கத்தையும் கலக்கத்தையும் நீக்கும் கருணைக் கடலே ! கொஞ்சம் துயில் எழுந்து வா !
நாங்கள் உன் பிரிவால் வாடுகிறோம் ! அழகு மிகுந்தவனே ! ஆற்றல் மிகுந்தவனே ! காப்பதே
கடமையாகக் கொண்டவனே ! பக்தருக்குப் பகைவர் வந்தால் அவர்களைச் சுட்டெரிப்பாய் !
அதிலே நீ வெப்பமாகத் தென்படுவாய் !
நிமலா ! கொஞ்சம் துயிலெழுந்து வா ! செப்பு முலையும் சிற்றிடையும்
திருவாயும் கொண்ட நப்பின்னாய், நீயும் துயில் எழுந்து வா ! எங்கள்
நோன்பு நிறைவேறுவதற்காக ஆலவட்டமும் கண்ணாடியும் தருகிறோம், அவற்றைக் கண்ணனிடம் கொடுத்து
அவன் அருள் மழையில் எங்களை நீராடச் செய், நப்பின்னாய் !
--------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
கற்பம் = துன்பம்; கலி = கடல்; செப்பம் உடையாய் = பிறருக்கு உதவும் அருட்குணம் உடையவனே; திறலுடையாய் = வலிமை நிறைந்தவனே ; செற்றார்க்கு = செற்றார்க்கு = பகைவர்க்கு; வெப்பம் கொடுக்கும் விமலா = சுட்டெரிக்கும் தீயாக மாறும் தூயவனே; துயிலெழாய் = உறக்கம் நீங்கி எழுவாயாக ! செப்பு அன்ன = சிமிழ் போன்ற சிறு மருங்குல் = சிற்றிடை;
நப்பின்னை நங்காய் = கண்ணனின் வாழ்க்கைத் துணைவியான நப்பின்னையே ;
திருவே = அழகுப்பதுமையே; துயிலெயாய் = நீயும் எழுந்திரு; உக்கம் = ஆலவட்டம் (அரசனுக்கு இருபுறமும் இரு பெண்கள் நின்று கொண்டு
பெரிய தூரிகை போன்ற விசிறியால் மன்னனுக்கு விசுறுவார்களே அது தான் ஆலவட்டம்)
தட்டொளி = முகம் பார்க்கும் கண்ணாடி.
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethiam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
12]
{25-04-2022|
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக