ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

திருப்பாவை (21) ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி !

மானிடனாகப் பிறந்திருக்கும் ஒளிச் சுடர் நீ !

 -------------------------------------------------------------------------------------

ஏற்ற  கலங்கள்  எதிர்பொங்கி  மீதளிப்ப,

.........மாற்றாதே  பால்சொரியும்  வள்ளல்  பெரும்பசுக்கள்,

ஆற்றப்  படைத்தான்  மகனே  அறிவுறாய் !

.........ஊற்றம்  உடையாய்  பெரியாய்  உலகினில்

தோற்றமாய்  நின்ற  சுடரே !  துயிலெழாய் !

.........மாற்றார்  உனக்கு வலிதொலைந்துன்  வாசற்கண்

ஆற்றாது  வந்து உன்  அடிபணியுமா  போலே

.........போற்றியாம் வந்தோம் ! புகழ்ந்துஏல் ஓர்  எம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

பாத்திரம் கொள்ளாத அளவுக்குப் பால் சொரியும் பசுக்களைப் படைத்தவன் நந்தகோபன் ! அவனுடைய மகன் அல்லவா நீ ! கேளாய் கண்ணா ! இவ்வளவு பெரும் செல்வத்தை உடையவன் நீ ! பெரியவன் நீ ! மறைந்து நின்று வரம் கொடுக்கும் கடவுள்கள் போல் அல்லாமல், உலகில் மானிடனாகவே பிறந்திருக்கும் ஒளிச் சுடர் நீ !

 

பகைவர்கள் எல்லாம் உன்னிடம் தோற்று, ஆற்றாமல் வந்து உன் அடி பணிவார்கள் ! அவர்கள் உன் வலிமையின் முன் தோற்றார்கள் ! நாங்கள் உன் கருணைக்குத் தோற்றோம் ! உன்னைப் போற்றிப் புகழவே அடிமை ஆனோம் ! கொஞ்சம் துயில் எழுந்து வாராய் கண்ணா !

 

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

 

ஏற்ற கலங்கள் = பால் கறக்க எடுத்து வந்த பாத்திரங்களில்;  எதிர் பொங்கி = பால் பொங்கி  ;  மீது அளிப்ப = நிரம்பி வழிந்திட; மாற்றாதே = மறுப்பு ஏதுமின்றி; வள்ளல் பெரும் பசுக்கள் = வள்ளல்போல நிரம்பவும் பால் தரும் பசுக்கள்; ஆற்றப் படைத்தாய் மகனே = ஏராளமாகக் கொண்ட நந்தகோபனுடைய மகனே ! கண்ணா ! அறிவுறாய் = கேளாய் ! ஊற்றம் = ஆற்றல்; பெரியாய் = பெரியவன் நீ; உலகில் தோற்றமாய் = இந்த நிலவுலகத்தில் மானிட உருவெடுத்து வந்துள்ள ஒளிச் சுடரே ! மாற்றார் = பகைவர்கள்;

 

வலி தொலைந்து = வலிமை இழந்து தோற்று; உன் வாசற்கண் ஆற்றாது வந்து = உய்யும் வழிதேடி வந்து உன் வாசலில் நின்று ; உன் அடி பணியுமாபோலே = உன் திருவடிகளைப் பணிந்து வணங்குவதைப் போல ; போற்றி யாம் வாந்தோம் = உன்னைப் போற்றிப் பாடி வணங்கிட நாங்கள் வந்துள்ளோம்; புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் புகழ்ந்து பாடுவோம் வாராய் பதுமை போன்ற பெண்ணே ! நப்பின்னாய் !

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 09]

{22-04-2022}

 ------------------------------------------------------------------------------



2 கருத்துகள்:

  1. ஆண்டாள் நாச்சியாரின் அழகிய பாடல்களுக்கு அருமையாக விளக்கம் தந்திருக்கும் தங்கள் கைவண்னம் பாராட்டுக்குரியது !வாழிய தங்கள் தமிழுள்ளம் !

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி ! வாழிய தமிழ்ச் செல்வரே ! வாழிய நீவிர் வளமுடன் பல்லாண்டு !

    பதிலளிநீக்கு