மாதங்களில் இது மார்கழி !
ஒளி நிறைந்த நன்னாள் !
--------------------------------------------------------------------------------------
மார்கழி மாதம் ! வைகறை நேரம் ! உடலில் சில்லென்று மோதிச் செல்லும் இளங் காற்று ! வெண்பட்டு விரித்தது போன்று எங்கும் பனிப் போர்வை ! நீராடப் போகிறார்கள் இளம் பெண்கள் ! யாரிவர்கள் ?
---------------------------------------------------------------------------------------
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்னாளால்
.........நீராடப் போதுவீர் போதுமினோ
நேரிழையீர் !
சீர்மல்கும்
ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
!
.........கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ
பன்குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
.........கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்
போல்முகத்தான்,
நாரா யணனே நமக்கே
பறைதருவான்,
.........பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் !
---------------------------------------------------------------------------------------
பொருள்:
---------------
மாதங்களில் இது மார்கழி ! வானிலும் மண்ணிலும் ஒளி நிறைந்த நன்னாள் !
மங்கையரே ! வாருங்கள் ! நீராடச் செல்வோம். சீர் நிறைந்த ஆயர்பாடியைச் சேர்ந்த
செல்வச் சிறுமியரே ! கூரிய வேலும், கொடிய தொழிலும் கொண்ட நந்தகோபனுக்குக்
குமாரனாக வந்தவன், அழகு வழியும் கருங்கண்ணாள் யசோதையின்
இளஞ்சிங்கம், கறுத்த மேனியும், சிவந்த கண்ணும், கதிரவன் போல் முகமும் கொண்டவன் ! அவர்
பெயர் நாராயணன் ! அவனே நமக்கு நோன்புப் பரிசு தருவான் ! உலகம் புகழ அவன் புகழைப்
பாடிக் கொண்டே இருப்போம் ! வாருங்கள் !
---------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
-------------------------
மதி நிறைந்த நன்னாள் = எங்கும் ஒளி பெருகும் வைகறைப் பொழுது; போதுவீர் = வருவீர்; போதுமினோ = வாருங்கள்; கூர்வேல் கொடுந்தொழிலன் = கூர்வேல் கொண்டு போரிடும் ஆற்றல் பெற்றவன்;
ஏரார்ந்த = அழகிய; கண்ணி = கண்களை உடைய; கதிர் மதியம் = கதிரவனின் கதிர்கள்;
நாரம் = நீர் (கடல்), அயணன் = செல்பவன்; நாராயணன் = திருப்பாற்கடலில் அலைவழியே
பயணிப்பவன்; பறை = அருள்; படிந்து = நீராடி; ஏலோர் = வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற சிறுமியரே.
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பாவை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
18]
{01-06-2022}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக