ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 20 மே, 2022

திருப்பாவை (11) கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து !

கள்ளங்  கவடற்ற   பொற்கொடியே ! புனமயிலே !

 ----------------------------------------------------------------------------------------

கற்றுக்  கறவைக்  கணங்கள்  பலகறந்து

.........செற்றார்  திறல் அழியச்  சென்று செருச்செய்யும்

குற்றமொன்று  இல்லாத    கோவலர்தம்  பொற்கொடியே!

.........புற்றரவு  அல்குல்  புனமயிலே !  போதராய் !

சுற்றத்துத்  தோழிமார்  எல்லாரும்  வந்துநின்

.........முற்றம்  புகுந்து முகில்வண்ணன்  பேர்பாட,

சிற்றாதே !  பேசாதே !  செல்வப்  பெண்டாட்டிநீ !

.........எற்றுக்கு  உறங்கும்  பொருள் ஏல்ஓர் எம்பாவாய் !

 

----------------------------------------------------------------------------------------

பொருள்:-

----------------

 

கண்ணனைப் பகைத்தவர்கள் எல்லாம் எங்கள் பகைவர்கள் என்று கருதுபவர்கள் யாதவர்.  அவர்களோடு போர் புரிந்து வெல்லுவார்.  கள்ளங் கவடமற்ற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏ ! பொற்கொடியே ! நாகப் படம் போன்ற பீடம் உடையவளே !

 

உனது உறவுப் பெண்கள் எல்லாம் வந்திருக்கிறோம். அந்தக் கார் மேக வண்ணன் பேர் பாட முற்றத்தில்  நின்று கொண்டிருக்கிறோம். நீயும் எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியவள் தானே ! நீ கண்ணனது செல்லப் பெண்டாட்டி ஆயிற்றே ! பின் எதற்காக உறங்குகிறாய் ? எழுந்து வா !

 

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

--------------------------

 

கற்று = கன்றுக்குட்டி; கறவை =பால் கறக்கும் பசு; கணங்கள் = கூட்டம்; பல கறந்து = பலவற்றைக் கவர்ந்து சென்று; செற்றார் = பகைவர்; திறல் = வலிமை; செரு = போர்; குற்றம் = கெட்ட பெயர்; கோவலர் = ஆயர் குலத்தினர்; பொற்கொடி = அழகிய பெண்; புற்று = பாம்புகள் வாழும் மண் புற்று; அரவு அல்குல் = பாம்பு படம் விரித்தாற் போன்று தோற்றம் உடைய பீடம்;

 

புனமயில் = ஆயர்பாடி என்னும் கழனி வாழ் மயில்; போதராய் = வருவாயாக !; சுற்றத்துத் தோழிமார் = உறவுப் பெண்கள் ; நின் முற்றம் புகுந்து = உன் வீட்டின் முன் நிற்கிறார்கள்; சிற்றாதே = மனம் சஞ்சலப் படாதே !; பேசாதே = வேறு பேச்சு வேண்டாம்


செல்வப் பெண்டாட்டி நீ = கண்ணனின் ஆசை மனைவி அல்லவா நீ; எற்றுக்கு = எதற்காக; உறங்கும் பொருள்= இன்னும் உறங்குகிறாய், நீ உறங்குவதில் பொருளில்லை.; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் போற்றிப் பாடுவோம் வாராய் பதுமை போன்ற பெண்ணே !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 06]

{20-05-2022}

-----------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக