ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 18 மே, 2022

திருப்பாவை (12) கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி !

கன்றை நினைத்து எருமை  பாலைச் சொரிகிறது  !

------------------------------------------------------------------------------------


கனைத்திளங்  கற்றெருமை  கன்றுக்  கிரங்கி

.......நினைத்து  முலைவழியே  நின்று  பால்சோர,

நனைத்தில்லம்  சேறாக்கும்  நற்செல்வன்  தங்காய் !

.......பனித்தலை வீழநின்  வாசற்  கடைப்பற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக்  கோமானைச் செற்ற,

.......மனத்துக் கினியானைப்  பாடவும்நீ  வாய்திறவாய் !

இனித்தா  னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் ?

.......அனைத்தில்லத்  தாரும் அறிந்தேலோ  ரெம்பாவாய் !

 

-------------------------------------------------------------------------------------

பொருள்:-

----------------

 

எருமை ஒன்று தன் கன்றை நினைத்து ஏங்குகிறது ! அந்த ஏக்கம் காரணமாக கன்று அங்கு இல்லாத போதே பால் சொரியத் துவங்குகிறது ! அதனால் வீடு முழுவதும் சேறாகிவிடுகிறது ! நாங்கள் தான் பார்த்தோமே ! அந்த வீட்டுக்குடைய யாதவச் செல்வன் மகளே ! அடி பாவாய் ! வெளியே பனி கொட்டு கொட்டென்று கொட்டுகிறதடி !

 

உன் வீடு பாலால் நனைந்தது போல், எங்கள் தலை பனியால் நனைந்துவிட்டது ! வாசலிலே நின்றுகொண்டிருக்கிறோம். அன்று கோபத்தால் வில்லெடுத்து இராவணனை வென்ற கோவிந்தனைப் பாட வேண்டுமடி ! என்ன இந்த உறக்கம் ! எழுந்து வந்து கதவைத் திற !

 

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

 

கனைத்து = வாயினால் ஒலி எழுப்பி; இளங் கற்று எருமை = மிக அணிமையில் கன்று ஈன்ற எருமை; கற்றுக்கு இரங்கி = கன்றை நினைத்து ஏங்கி; முலை வழியே நின்று பால் சோர = மடியிலிருந்து தானாகப் பால் சொரிய; நனைத்து இல்லம் சேறாக்கும் = இல்லமெலாம் பாலினால்  சேறாக;

 

நற்செல்வன் தங்காய் = ஆயர் இனச் செல்வனின் தங்கையே !; பனித் தலை வீழ = பனி கொட்டி தலையெலாம் நனைந்து போக; நின் வாசற் கடைப் பற்றி = நின் இல்லத்தின் வாசலில் நிற்கின்றோம்;  சினத்தினால் = சீதையைக் கவர்ந்து சென்ற  சினத்தினால் ; தென்னிலங்கைக் கோமானை = இலங்கை அரசனாகிய இராவணனை;

 

செற்ற = போரிட்டுக் கொன்ற; மனத்துக்கு இனியானை = மனதுக்கு இனியவனாகிய இராமனாக அவதாரம் எடுத்திருந்த கண்ணனை; பாடவும் நீ வாய் திறவாய் = பாடிப் பரவ வேண்டும், எழுந்திராய்; இனி தான் எழுந்திராய் = தானாக எழுந்து வா !;

 

ஈதென்ன பேருறக்கம் = இது என்ன அப்படி ஒரு கும்பகர்ணத் தூக்கம்; அனைத்து இல்லத்தாரும் = எல்லா வீட்டினரும் ; அறிந்து = பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனை போற்றிப் பாட வேண்டும், எழுந்து வா அருமைப் பெண்ணே ! எழுந்து கதவைத் திற !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 04]

{18-05-2022}

------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக