பொற்றா மரையடியே போற்றும்
பொருள் கேளாய் !
சிற்றஞ் சிறுகாலே
வந்துன்னைச் சேவித்துன்
........பொற்றா மரையடியே போற்றும்
பொருள்கேளாய் !
பெற்றம் மேய்த்துண்ணும்
குலத்திற் பிறந்துநீ,
........குற்றேவல் எங்களைக்
கொள்ளாமற் போகாது,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்
கோவிந்தா !
........எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன்றன்னோடு,
உற்றோமே யாவோம்
உமக்கேநா மாட்செய்வோம்,
.......மற்றைநம் கரமங்கள் மாற்றேலோ
ரெம்பாவாய் !
------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------
சோறு கண்ட இடமெல்லாம் சொர்க்கம் என்று வீண் பொழுது கழித்திருந்தோம். எங்கள் குலத்தில் நீ வந்து பிறந்தாய். உன் பொற்றாமரை அடிகளை நாங்கள் போற்றி மகிழ்கிறோம். கன்றும் கறவையும் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ, எங்களுக்கு எளியவனாகவே காட்சி தந்தாய். இப்படி உனக்குச் சேவை செய்யும் பேற்றினை நீ எங்களுக்கு என்றென்றும் தந்தருள வேண்டும் !
இந்தப் பிறவியில் மட்டுமல்ல, ஏழேழு பிறவியிலும் உனக்கே உறவாக நாங்கள் இருக்க வேண்டும். உனக்கே
நாங்கள் பணி செய்து கிடக்க வேண்டும். வேறொன்றும் எங்களை அணுகாமல் எங்களைக்
காத்தருள வேண்டும் !
-----------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
---------------------------
சிற்றஞ் சிறு காலே = காலைப் பொழுதிலேயே; வந்துன்னைச் சேவித்து = வந்து உன்னை வணங்கி; பொற்றாமரை அடியே போற்றும் = உன் பொற்றாமரை அடிகளில் பணிந்து வணங்குகிறோம் ; பொருள் கேளாய் = எங்கள் வேண்டுதலைக் கேட்பாயாக ; பெற்றம் = பசு; குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது = உனக்குப் பணிவிடை செய்யும் பேறினைத் தந்தருள்வாய் ; இற்றை = இன்றே; பறை கொள்வான் = எங்களுக்கு உன் அருள் வேண்டும்; எற்றைக்கும் = என்றென்றும்;
ஏழேழ்
பிறவிக்கும் = ஏழேழு பிறவிகளுக்கும் ; உன்றன்னோடு
உற்றோமே = உனக்கு உறவுப் பெண்களாக இருக்கும் பேறினைத் தரவேண்டும்; உமக்கே நாம் = உன்னுடையவர்கள் நாங்கள்; ஆட்செய்வோம் = உனக்கே ஆட்பட்டுள்ளோம்; மற்றை நம் காமங்கள் மாற்றேல் = வேறு எந்த ஆசையும் எங்களிடம் அணுகா வண்ணம் எங்களைக் காத்தருள்வாய்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவோம் வாருங்கள்
பாவையரே !
-----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப்பாவை” வலைப்பூ,
[தி.ஆ: 2053 , மீனம்,
(பங்குனி)12]
(26-03-2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக